Chapter 057 - ஸூரத்துல் ஹதீத்


அத்தியாயம் - 57

ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

57:1. வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.

57:2. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

57:3. (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

57:5. வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

57:6. அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.

57:7. நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.

57:8. உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).

57:9. அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.

57:10.அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

57:11. அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்hக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.

57:12. முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) ''இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்"" (என்று கூறப்படும்).

57:13. முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: ''எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்"" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், ''உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்."" பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

57:14.இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?"" என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள், ''மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்"" என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.

57:15. ''ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்"" (என்றுங் கூறப்படும்).

57:16. ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன் அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.

57:17. அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்: நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.

57:18. நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும,; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.

57:19. மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்.

57:20.அறிந்து கொள்ளுங்கள்: ''நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.

57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

57:24எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ, எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.

57:25. நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.

57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம,; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.

57:27. பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.

57:28. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன்.

57:29. அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.