அத்தியாயம் - 90
ஸூரத்துல் பலத் (நகரம்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
ஸூரத்துல் பலத் (நகரம்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
90:1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:5. 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்" என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6. ''ஏராளமான பொருளை நான் அழித்தேன்"" என்று அவன் கூறுகிறான்.
90:7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
90:9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:10.அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11.ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12.(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:13.(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:14.அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16.அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:17.பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19.ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20.அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.