Chapter 086 - ஸூரத்துத் தாரிஃக்


அத்தியாயம் - 86

ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

86:2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

86:3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,

86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

86:14.அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

86:15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

86:16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.

86:17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.